பரிசும் பொறுப்பும்!
பரிசும் பொறுப்பும்!
சென்னை, பெரம்பூர், ஆர்.பி.சி.சி.சி பள்ளியில், 1971ல், 11ம் வகுப்பில் சேர்ந்திருந்தேன். தஞ்சாவூரிலிருந்து வந்திருந்ததால், வகுப்பில் யாருடனு பழக்கம் இல்லை. தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்தேன்.
அனைத்து பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் வகையில், 'திருக்குறள் ஒரு உலகப் பொதுமறை' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி அறிவிப்பு வெளியாகியிருந்தது. அது தண்டையார்பேட்டை, சங்கரலிங்க நாடார் நினைவுப் பள்ளியில் நடப்பதாக இருந்தது. பங்கேற்கும் ஆர்வத்தில் பெயரை பதிவு செய்து, பயற்சி செய்து கொண்டிருந்தேன்.
அங்கு செல்ல பயணச் செலவுக் பணம் இல்லை, இதனால் தவித்து சோர்வுடன் காணப்பட்டேன். இதை அறிந்த வகுப்பு ஆசிரியர் ஆர்.ராஜகோபால் தேற்றி, பயணச் செலவாக, 1 ரூபாய் தந்தார். அப்போது, பேருந்து பயணக் கட்டணம், 25 காசுகள் தான்.
போட்டியன்று வகுப்பு தோழன் அரவிந்தனும் உடன் வந்தான். பயணக் கட்டணத்தை அவனே ஏற்றான். சிறப்பாக பேசி, மூன்றாம் பரிசு பெற்றேன். போட்டி நடத்தியவர்கள் காபி, டிபன் தந்து உபசரித்தனர். எனக்கு, செலவே ஏற்படவில்லை.
மறுநாள் வகுப்பு ஆசிரியரை சந்தித்து, அவர் தந்திருந்த ரூபாயை திரும்ப கொடுத்தேன். அன்பளிப்பாக அதை எனக்கே வழங்கி வாழ்த்தினார். தொடர்ந்து நன்றாக படித்து, வங்கிப் பணியில் சேர்ந்து, 1996ல் மேலாளராக உயர்வு பெற்றேன். அப்போது, அந்த ஆசிரியர் இல்லம் தேடி சென்று, புத்தாடை வழங்கி, ஆசி பெற்றேன்.
இப்போது என் வயது, 65; பணி ஓய்வு பெற்று, பழைய நினைவுகளை அசை போட்டப்படி வாழ்கிறேன்.
கதை ஆசிரியர்-எஸ்.ரவி

கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."