sirukathaigal

கவிஞன்ஆனானே!

கவிஞன்ஆனானே!-kavinjanaanane

கவிஞன்ஆனானே!

 ஒரு காட்டின் ஓரமாக ஒரு சிறு கிராமம் இருந்தது, அதில் சிவனடியான் என்ற விறகு வெட்டி தன் மனைவி கங்காவுடனும் மகன் பரமனுடனும் வாழ்ந்து வந்தான். சிவனடியானுக்குச் சிறு வயதிலேயே படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அவனது தந்தை அவனைப் பள்ளிக்கு அனுப்பாமல் விறகு வெட்டத் தன்னுடன் காட்டிற்கு அழைத்துச் சென்று வரலானான். இவ்வாறு வளர்ந்து பெரியவனான சிவனடி யான் தன் மகன் பரமனையாவது நன்றாகப் படிக்க வைப்பது என்று தீர்மானித்து அவ்வூர்த் திண்ணைப் பள்ளியில் தன் மகனைச் சேர்த்தான்.

ஆனால் பரமனுக்குப் படிப்பில் அக்கறை இல்லாமல் விளையாட்டில்தான் கவனம் இருந்தது. அதனால் பள்ளி ஆசிரியர் சிவனடியானைக் கண்டு அவனது மகன் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பது பற்றிக் கூறினார். 

அதுகேட்டு சிவனடியான் தன் வீட்டிற்குப் போனதும் தன் மகனை நான்கு அடிகள் அடித்து “ஏண்டா! பள்ளிக் கூடத்தில் ஏன் படிப்ப தில்லை?' என்று கேட்டான். பரமனோ 'எனக்குப் படிக்க விருப்பம் இல்லை. நானும் உன்னோடு காட்டிற்கு வந்து விறகு வெட்டு கிறேன்" என்றான். அதுகேட்டு சிவனடியான் தன் மகனை அடிக்கக் கையை ஓங்கவே பரமனும் “நீயே படிக்காத போது நான் ஏன் படிக்க வேண்டும்?” என்று எதிர்க்கேள்வி கேட்டான். 

அதுகேட்டு சிவனடியான் திகைத்து நின்றான். அவன் தன் மனைவியிடம் “கேட்டாயா உன் மகன் சொன்னதை? என்னையே கேலி செய்கிறான். நான் படித்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்'' என்றான். அவன் மனைவியும் “ஏதோ அறியாப் பையன். என்னவோ சொல்லிவிட்டான். நான் சிறு வயதில் பள்ளிக்கூடத் தில் படித்திருக்கிறேன். எனக்குக் தெரிந்ததை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறேன். எழுதப் படிக்கத் தெரிந்து கொள்ளுங்களேன்" என்றாள்.

அன்றிரவே அவள் ஒரு எழுது பலகையைத் தன் கண்வனிடம் கொடுத்தாள். அதில் எழுத்துக்களை எழுதி அவற்றின் மீது எழுதி எழுதிப் படிக்கச் சொன்னாள்.
அவனும் அன்றிரவு வெகுநேரம் வரை விழித்து எழுதிப் பழகிப் படுத்துத் தூங்கினான். மறுநாள் காலை நேரம் கழித்து அவன் எழுந்தான். அதனால் சரியாகக் கூடச் சாப்பிடாமல் கோடாலியை எடுத்துக் கொண்டு காட்டிற்கு ஓடினான். இப்படியே ஒருவார காலத்திற்கு நடந்தது. 

அப்போது சிவனடியான் இனிமேல் எழுதிப் பழகுவதையே விட்டுவிடப் போவதாகத் தன் மனைவியிடம் கூறினான். ஆனால் அவன் மனைவியோ கூடாது. நான் இனி நீங்கள் காட்டிற்குப் போகும்போது எழுது பலகையில் எழுத்துக்களை எழுதிக் கொடுக்கி'றேன். உச்சி வேளையில் இளைப் பாறும்போது அவற்றின் மீது எழுதி எழுதிப் பழகுங்கள்” என்று யோசனை கூறினாள். சிவனடியா னும் அதனை ஏற்று அதன்படி நடந்தும் வரலானான். 

ஒருநாள் குதிரை மீதேறி அக்காட்டு வழியே சென்ற ஒருவன் சிவனடியான் மரக்கிளையில் கட்டித் தொங்கவிட்டிருந்த எழுதுபலகையைப் பார்த்தான். அதில் சிவனடியான் எழுதி எழுதிப் பழகுவதையும் பார்த்தான். அவனிடம் அந்த வழிப் போக்கன் “என்னப்பா இது? விறகு வெட்ட இங்கே வந்து விட்டு எழுதிப் பழகுகிறாயே. ஏன்?” என்று கேட்டான்.

சிவனடியானும் "நான் சிறு வயதில் படிக்க ஆசைப்பட்டேன். ஆனால் படிக்க முடியவில்லை. என் மனைவி அளித்து வரும் ஊக்கத்தால் இப்போது கற்க முயல்கிறேன்" என்று விவரமாகக் கூறினான்.

வழிப்போக்கனும் அவனைப் பாராட்டி அவனது முகவரியை வாங்கிக் கொண்டு “நீ தொடர்ந்து படித்துக் கொண்டே இரு. விட்டு விடாதே” என்று கூறிவிட்டுச் சென்றான். இதற்கு நான்கு வாரங்களுக்குப் பின் ஒருநாள் மாலை சிவனடியான் வீட்டிற்குத் திரும்பி வந்தபோது அவன் மனைவி அவனிடம் “நீங்கள் என்றோ ஒருநாள் காட்டில் ஒரு வழிப்போக்கரைச் சந்தித்தீர்களாமே.. அவர் தன் வேலையாளிடம் உங்களுக்குச் சில புத்தகங்களைக் கொடுத்து, எழுத கற்றுக் கொண்டால் போதாது, இவற்றைப் படிக்கவும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று உங்களிடம் சொல்லச் சொன்னாராம்'' என்றாள்.

அன்று முதல் சிவனடியானுக்குப் புதிய உற்சாகம் பிறந்தது. இரவு வேளைகளில் உட்கார்ந்து சிறு சிறு சொற்களை எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டான். தன் தந்தை படிப்பதைக் கண்ட பரமன் அவனைப் போலவே தன் பள்ளிப் புத்தகங்களை எடுத்துப் படிக்கலானான். 

ஒரு நாள் சிவனடியானுக்கு தான் படித்த புத்தகத்தில் ஓரிடத்தில் சந்தேகம் வந்தது. அதைத் தன் மனைவியிடம் கேட்க அவள் 'எனக்கும் தெரியாது. நீங்கள் படிப்பில் என்னையும் மிஞ்சி விட்டீர்கள். இனி உங்கள் சந்தேகங்களை எல்லாம் நம் ஊர் பண்டிதர் கோபால சர்மாவிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்" என்றாள். 

அவன் காட்டின் அழகை எல்லாம் தனக்குத் தோன்றிய விதத்தில் ஒரு காகிகத்தில் எழுதினான். அதை ஒரு தடவை திரும்பப் படித்து அவன் பெரும் மகிழ்ச்சி அடைந்தான். மறுநாள் அதை எடுத்துப் போய் கோபால சர்மாவிடம் காட்டினான்.

கோபால சர்மா அதைப் படித்து விட்டு "என்னடா இது! கவிதை எழுத ஆரம்பித்து விட்டாயா? இந்த மாதிரி பைத்தியக்காரத்தன வேலையில் இறங்கினால் நீ சோற்றுக்கே தாளம் போட வேண்டிய நிலை வந்து விடும். அதனால் இப்படியெல்லாம் எழுதுவதை விட்டு விட்டு பேசாமல் விறகு வெட்டிப் பிழை' என்று கூறி அவனை அனுப்பினார். 

சிவனடியான் உற்சாகம் இழந்து வீட்டிற்குப் போய்த் தன் மனைவியிடம் நடந்ததைக் கூறினான். அவளும் அவன் எழுதியதை வாங்கிப் படித்துவிட்டு ஆகா! எவ்வளவு நன்றாக இருக்கிறது! இதைப் பாராட்ட மனம் இல்லாமல் உங்கள் மீது பொறாமைப் பட்டுத்தான் அந்த கோபால சர்மா உங்களைக் கவிதை எழுத வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். இனிமேல் அவரைப் பார்க்கப் போகாதீர்கள்" என்று கூறினாள். 

இதற்குப் பின் இரண்டு மாதங்கள் கழிந்தன. அவ்வூருக்கு அரசாங்க வீரர்கள் வந்து பறை சாற்றினார்கள். அவர்கள் அறிவித்தது என்னவென்றால் புத்தாண்டு பிறக்கும்போது தலை நகரில் கவிதைப் போட்டி நடை பெறும் என்றும் அதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்பதேயாம். 

சிவனடியானின்  மனைவி தன் கணவனிடம் “நீங்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளுங்கள். ஒருவேளை உங்களுக்குப் பரிசு கிடைக்கா விட்டாலும் மற்றவர்களின் கவிதைகள் எப்படிப்பட்டவை என்பதை தெரிந்து கொள்ளலாம்'' என்றாள்.

சிவனடியானும் தன் மனைவி அளித்த உற்சாகத்தால் தலைநகருக்குப் போய்க் கவிதைப் போட்டியில் கலந்து கொண்டான். எல்லோரும் தம் கவிதைகளைக் கூறினார்கள். சிவனடியானும் தன் கவிதையான 'காட்டுப் பூனை என்பதைப் படித்துக் காட்டினான். அதில் இயற்கையின் வர்ணனை மிகுதியாக இருந்தது. நடுவர்கள் அந்தக் கவிதையைச் சிறந்ததாகப் பரிசிற்குத் தேர்ந்தெடுத்தார்கள்.

இதைக்கேட்ட சிவனடியானின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. மன்னரும் அவனைப் பாராட்டிப் பரிசளித்தார். அப்போது அவன் இன்று நான் இப்பரிசைப் பெறக் காரணமாக இருந்தவர் நான் முன்பின் அறியாத ஒருவர். அவர் என்னைத் தொடர்ந்து படிக்கச் சொல்லிப் பல புத்தகங்களையும் எனக்கு அனுப்பினார். இந்த சந்தர்ப்பத்தில் அவரைக் கண்டு நன்றி செலுத்த முடியவில்லையே என்றுதான். வருத்தப்படுகிறேன்'' என்றான்.

அப்போது மன்னர் 'அவர் உன் நன்றியை ஏற்றுக் கொண்டு விட்டார். அவர் வேறு யாருமல்ல. நானேதான். மாறு வேடத்தில் நாட்டைச் சுற்றிப் பார்த்து வந்து கொண்டிருந்த நான் உன்னைக் காட்டில் சந்தித்தேன். விறகு வெட்டிக் கொண்டே நீ படிப்பில் காட்டிய ஆர்வம் என்னைக் கவர்ந்தது. எனவே நான் உனக்கு ஊக்கம் அளித்துப் புத்தகங்களையும் அனுப்பி வைத்தேன். என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. 

நீ நன்கு படித்துக் கவிதை புனையும் திறனையும் பெற்று விட்டாய். உன் திறமையை யாவருக்கும் காட்டவே இந்தப் போட்டியை ஏற்படுத்தினேன். உன்னைப்போலப் பல கவிஞர்கள் இருப்பதும் இன்று தெரிந்தது. அவர்கள் இன்று பரிசு பெறாவிட்டாலும் அடுத்த முறைகளில் பரிசு பெறக் கூடும். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என வாழ்த்திப் பரிசளித்தார்.

சிவனடியான் மன்னர் அளித்த பரிசுகளோடு தன் ஊருக்கு வந்து சுகவாழ்வு வாழ்ந்தான்.

சிவனார் செல்வன்

அம்புலிமாமா


Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories

கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."