sirukathaigal

அன்புடன் அந்தரங்கம் காதல் திருமணம்

 

அன்புடன் அந்தரங்கம் காதல் திருமணம்-Love and intimacy, love marriage

அன்புடன் அந்தரங்கம்:2காதல் திருமணம்

அன்புள்ள அம்மா –

நான், 29 வயது பெண். படிப்பு: பி.காம்., முதலாமாண்டு படித்தபோது, விபத்து ஒன்றில் பெற்றோரை இழந்தேன். உறவினர் ஒருவர் எனக்கு அடைக்கலம் தந்தார்.

உறவினர் மகன் மீது ஏற்பட்ட காதலால், கல்லுாரியில் படிக்கும்போதே கர்ப்பமானேன். அவசர அவசரமாக திருமணம் முடித்து, தனிக்குடித்தனம் வைத்து விட்டனர்.

திருமணமான இரண்டாம் ஆண்டு, எனக்கு மூச்சு திணறல் ஏற்பட, மருத்துவமனையில் சேர்த்தார், கணவர். இதயத்தில் அடைப்பு இருப்பதாக இடியை இறக்கினார், மருத்துவர்.

சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பியதில் இருந்து, என்னை விட்டு ஒதுங்க ஆரம்பித்தார், கணவர். அதுமட்டுமல்லாமல், மது அருந்தவும் ஆரம்பித்தார். கணவரின் பெற்றோரோ எதையும் கண்டு கொள்ளாமல் விலகி விட்டனர். கணவரை திருத்த முடியாமல் தவிக்கிறேன்.என் வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது. நான் என்ன செய்யட்டும், அம்மா.

அன்பு மகளுக்கு —

உன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டவனுக்கு, உன் சிறு உடல் பிரச்னை பூதாகரமாக தெரிகிறதே. அப்படியென்றால் அவனின் காதல் பொய்யானதாக தோன்றுகிறது.

இதே பிரச்னை அவனுக்கு இருந்தால், அவனை நெஞ்சில் வைத்து நீ பராமரிப்பாய் அல்லவா? அடுத்து நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...

அடுத்தமுறை, நீ இதயநோய் சிறப்பு மருத்துவரிடம் செல்லும்போது, கணவரையும் உடன் அழைத்துப் போ. '13 சதவீத பெண்களுக்கு, தமிழகத்தில் இதய பிரச்னை உள்ளது. 

உன் மனைவிக்கு இருக்கும் பிரச்னையை முழுமையாக கட்டுபடுத்தலாம். தாம்பத்யம் தடைபட வாய்ப்பில்லை. தொடர் மருத்துவமும், அனுசரணையான அன்புமே, மனைவியை சுகப்படுத்தும்...' என, கணவரிடம் கூறட்டும், மருத்துவர்

உன் மீதான வெறுப்பை தவிர்க்கவும், குடி பழக்கத்தை நிறுத்தவும், கணவருக்கு தகுந்த மன நல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய் உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் உடல் எடையை குறை மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை தொடர்ந்து சாப்பிடு

பாதியில் நிறுத்திய இளங்கலை வணிகவியல் படிப்பை, தொலைதுார கல்வி இயக்ககம் மூலம் தொடர். எதாவது ஒரு வேலைக்கு போ.

'நான் இதய நோயாளி' என்ற பாவனையை துாக்கி எறி. 'இவள் இதய நோயாளி' என்ற தோற்றம், உன் உடலில் தெரியாத வண்ணம், உடல்மொழியை அமைத்துக் கொள்

சீக்கிரமே ஒரு குழந்தை பெற்றுக் கொள். கணவன் - மனைவிக்கிடையே
ஆன பிணக்குகளை பெரும்பாலும் குழந்தைகள் தீர்த்து வைக்கும்.மேற்கூறிய அனைத்தையும் செய்தாலே, கேள்விக்குறியான உன் வாழ்க்கையை
ஆச்சரியக்குறியாக்கும் மகளே!

கதை ஆசிரியர்: சகுந்தலா கோபிநாத்

தினமலர் 2023


Sirukathai | sirukathaigal | Tamilkathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories


அன்புடன் அந்தரங்கம் காதல் திருமணம் அன்புடன் அந்தரங்கம் காதல் திருமணம் Reviewed by Sirukathai on ஜூன் 23, 2025 Rating:

கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."