New Stories

வெற்றிலை பாக்கு

வெற்றிலை பாக்கு-Betel leaves

வெற்றிலை பாக்கு

ஒரு பெண் நமக்கு பணம் கொடுக்கிறாள். அவள் எதற்காக பணம் கொடுக்கிறாள்? அறிமுகமே இல்லாத பெண் ஆயிற்றே அவள் ? இப்போதெல்லாம் நிலைமை தலைகீழாக மாறிவிட்டதா ?

இது சரியா ? தவறா? சமூகத்திற்கு இது தவறானது தான் . இப்படி நாம் செய்வது நம்முடைய கௌரவத்தை குறைக்குமாே? ஆண் தான் பணம் கொடுத்து ஒரு பெண்ணிடம் செல்வான் என்று இருந்தது.

இந்தப் பெண் நமக்கு பணம் கொடுக்கிறாளே? எதற்கு? ஒரு வேளை அந்தப் பெண் தவறாக நடந்து கொள்வதற்கு நமக்கு பணம் கொடுக்கிறாளா? இல்லை வேறு எதற்குமா ? குழம்பி நின்றான் நிரஞ்சன் .

அவனுக்குள் அத்தனை குழப்பங்கள். அவன் தவறுகள் செய்திருக்கிறான் அந்தப் பெண்கள் சம்மதித்ததால்.

இது முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறதே ? வசதியானவள் .கணவர் வெளிநாட்டில் இருக்கிறார். அவ்வளவு செல்வாக்கு, வசதிகள் இருந்தும் நமக்கு பணம் கொடுத்து வீட்டுக்கு அழைக்கிறாளே? இதை அந்த வீட்டில் என்ன நினைப்பார்கள்? இப்படி ஒரு பக்கம் அவனுக்கு மனது அடித்துக் கொண்டாலும் அந்தப் பெண் நம்மை கூப்பிடுகிறாள். பணமும் தருகிறாள். கரும்பு தின்னக் கூலியா பணத்தையும் வாங்கிக் கொண்டு நன்றாக அனுபவித்து விட்டு வரலாம். இதற்கு மேல் நமக்கு என்ன வேண்டும்?

என்று இன்னொரு பக்கம் அவனுக்கு ஒரு ஆசைகள் பூக்களாய் பூத்தன.

” எத்தனை மணிக்கு போகணும் ?

“நீங்க இப்பவே போலாம் “

என்று சொன்னான் புரோக்கர்

” எதுவும் தவறு வந்து சேர்ந்து விடாதே? போலீஸ் எதும் வருவாங்களா ? ” என்று கொஞ்சம் பயந்து கேட்டான்.

” அப்படியெல்லாம் எதும் இருக்காது. அந்தப் பெண் நாகரீகமானவள். பணக்காரி. அவர்களுக்கும் கட்டுப்பாடு கௌரவம் இருக்கிறது இல்லையா? நீங்கள் தைரியமாக போகலாம்” என்று அந்த புரோக்கர் சொல்ல

” சரி என்ன நடக்கிறது பார்க்கலாம் “

என்று முடிவு செய்து சிறிது நேரத்திற்கெல்லாம் தன் இரு சக்கர வாகனத்தில் அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றான் நிரஞ்சன்.

தனியான பங்களா . வாசலிலேயே நின்றிருக்கும்உயர்தர கார்கள் .வீட்டின் வெளியே நின்று போன் செய்தான்

“நான் நிரஞ்சன் “

” வந்துட்டீங்களா ?

” ஆமா”

” இந்தா வாரேன்”

சிறிது நேரத்திற்கு எல்லாம் அழகு பதுமையாக வந்து நின்றாள் அமலா அத்தனை அழகு.

” இவள் ஏன் நமக்கு பணம் கொடுத்து இங்கே வரவைத்து இருக்கிறாள்.சரி கிடைத்தது வரைக்கும் லாபம்”

உள்ளே அழைத்துச் சென்றாள்.

பரந்து விரிந்த அறை .அவன் மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள்; ஆசைகள் துளிர் விட்டுக் கொண்டிருந்தன. அந்தச் சொர்க்கத்தில், சந்தோஷத்தில் மிதந்தான்.

“சரி போகலாமா ? “

“இவ்வளவு அவசரமா ? “

கணவன் வெளிநாட்டில் இருப்பதால் இப்படி இருக்கலாம் போல? நிரஞ்சனுக்கு மேல் மூச்சு ,கீழ் மூச்சு வாங்க எழுந்து நடந்தான் நிரஞ்சன்.

” இப்படி வாங்க “

” என்ன இங்க உட்கார சொல்றாங்க?

என்று தயங்கியபடியே அந்த டைனிங் ஹாலில் அமர்ந்தான்.

அவன் முன்னால் தட்டை எடுத்து வைத்தாள் சாதம் போட்டாள்.

” மீன் குழம்பு வேணுமா ? சிக்கன் குழம்பு வேணுமா ? மட்டன் குழம்பா ?

நிரஞ்சனுக்கு புரியவில்லை

” நான் சாப்பிட்டு தான் வந்தேன் “

” இல்ல நீங்க சாப்பிட்டுத்தான் ஆகணும் .ஒருவேளை சாப்பிட வச்சு நம்மள தெம்பா ஆக்குறாளாே? என்னமோ ? உள்ளுக்குள் சிலிர்த்தான். அவன் கேட்காததற்கு முன்னரே போட்டுக் கொண்டே இருந்தாள்.

“சாப்பிடுங்க. நல்லா சாப்பிடுங்க”

” இது என்ன புதுசா இருக்கே ? “குழம்பியபடியே சாப்பிட்டு முடித்தான். கையை துடைப்பதற்கு துணியை கொடுத்தாள். வெற்றிலை பாக்கும் கொடுத்தாள். சிறிது நேரம் அவனை பார்த்து விட்டு

“சரி நீங்க கிளம்பலாம்”

” என்ன கிளம்பலாமா ?வேறு ஏதும் இல்லையா?

என்று கேட்டான் நிரஞ்சன்

“வேற என்ன வேணும் ?”

என்று நெற்றியைத் தூக்கி கேள்வி கேட்டாள்

” இல்ல வேற ஏதும் இல்லையா ? “

என்று மறுபடியும் கேட்டான்.

” வேற என்ன வேணும் ? “

என்று கொஞ்சம் கோபமாக கேட்டாள்.அவனைக் கோபமாகப் பார்த்தாள் அமலா

“இல்ல வேற எதுக்கோ வர சொன்னது மாதிரி இருந்தது ?”

“வேற எதுக்கு நான் வர சொல்லலையே .உங்களுக்கு சாப்பாடு போடணும். அதை நான் பாக்கணும். ரசிக்கணும் .அவ்வளவுதான் “

என்று சாதாரணமாக சொன்னாள்

” அவ்வளவுதானா ? “

“ஆமா வேற என்ன “

” சரி நீங்க கிளம்பலாம் “

ஏதோ நினைத்து சந்தோஷத்தில் மிதந்த நிரஞ்சனுக்கு அது மிகவும் ஏமாற்றமாக இருந்து.

“என்ன இது இப்படி சொல்லிட்டாளே? நான் உண்மையிலேயே கிளம்பலாமா?”

என்று கொஞ்சம் கோபமாக கேட்டான்.

“ம்.. ஆமா “தலையாட்டினாள்.

“என்ன இது புரிய மாட்டேங்குது. சரி பணமும் கிடைச்சது. சாப்பாடு போட்டாங்க .அவ்வளவுதான் போல “

என்று நினைத்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினான்.

தன்னுடைய செல்போனை எடுத்தாள்

” ஹலோ நான் அமலா பேசுறேன். நாளைக்கு ஒரு ஆள வரச் சொல்லுங்க. நான் பணம் அனுப்புறேன் மதியம் லஞ்சுக்கு வந்தா சரியா இருக்கும்னு நினைக்கிறேன் “

அவள் மனதுக்குள் ஆயிரம் எண்ணங்கள் துளிர் விட்டுக் கொண்டிருந்தன. கோடி கோடியாய் சம்பாதிக்கும் கணவன் அருகில் இல்லை . பணம் பணம் என்று அலைகிறான்.

நாம் சமைப்பதை சாப்பிட்டு ருசி பார்த்து பசியாற அவன் இல்லை. வெறுமையாக இருக்கும் எனக்கு என் கணவன் உருவத்தில் மற்றவர்களைப் பார்க்கிறேன். நான் சமைத்துக் கொடுப்பதை அவர்கள் சாப்பிட வேண்டும் .இதுதான் என் ஆசை. ஏன் இவர் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாய் ? இவர்கள் சாப்பிடுவது போல தானே என் கணவரும் சாப்பிடுவார். அவருக்கு எப்ப இது சரி என்று தோன்றும்.. சரி, அவர் வரட்டும். அதுவரைக்கும் நான் யாருக்காவது பணம் கொடுத்து சாப்பாடு போட்டு மகிழ்ச்சி பெறலாம் “

என்று நினைத்த அமலா, மறுநாள் வருபவனுக்கு ,என்ன சமைக்கலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்தாள்.



Sirukathai | sirukathaigal | Tamil kathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories

கருத்துகள் இல்லை