ஒரு தலை காதல்
ஒரு தலை காதல்
இன்று மாதுரியை தனியாக சந்தித்து, அவளிடம் தனது காதலை தெரிவிக்க, கதிர் முடிவு செய்து இருந்தான்.
இப்போது அவனுக்கு வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்து விட்டதால், இனியும் தாமதிக்க கூடாது என்று, இந்த முடிவை எடுத்து இருந்தான்.
ஒரு தனியார் வணிக நிறுவனத்தின் சென்னை கிளையில், சேல்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் பிரிவில் அவனும், அந்த அலுவலகத்தின் அக்கௌன்ட் செக்சனில் உதவியாளராக மாதுரியும் வேலை பார்க்கிறார்கள். அவளுடைய எளிமையான தோற்றம் மற்றும் இனிமையாக பழகும் முறை அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது. கடந்த இரண்டு வருடங்களாக இருவரும் பழகினாலும்… அவள் மீதான ஒரு தலை காதலை, அவளிடம் இதுவரை கதிர் சொன்னதில்லை.
பெரும்பாலான நேரங்களில் மாதுரி, சொல்ல வேண்டிய செய்திகளை, சைகை மொழியில் சொல்வது அவளுடைய வழக்கம். ஏதேனும் அலுவலக வேலைகளை, சற்று தூரத்தில் இருந்து சொல்ல வேண்டி வந்தால், அதை சத்தமாக சொல்வதற்கு பதில் விழிகளால் சமிக்கை செய்து, கைகளால் அபிநயம் பிடிப்பது போல சொல்வாள். ஒரு சில சமயங்களில் மற்றவர்கள் புரியாமல் முழிப்பார்கள். அதற்கு அவள் சிரித்துக்கொண்டே வார்த்தைகளில் சொல்லி விளங்க வைப்பாள்.
கதிர் மட்டும் அவள் சொல்ல வருவதை எளிதில் புரிந்து கொண்டு விடுவான். அதை அவளே வியந்து, அவனை பாராட்டி இருக்கிறாள்.
“சார்… நான் சைகையில் பேசறத, நீங்க மட்டும் தான் ரொம்ப சுலபமா புரிஞ்சிக்கிறீங்க. நம்ம ரெண்டு பேருக்கும் நிறைய விஷயங்கள்ள ஒத்துமை இருக்கு”
அவன் அவளுக்கு பதில் சொல்லாமல் சிரித்தபடி, மௌனமாக கடந்து செல்வான். ஆனால் ‘ஆமா, அதை தான் கெமிஸ்ட்ரினு சொல்லுவாங்க’ என்று அவளிடம் சொல்ல விரும்பியதை மனசுக்குள் சொல்லிக்கொள்வான்.
ஆபீஸ் வேலைகள் தவிர, அவளுடைய குடும்ப விஷயங்கள் பற்றியும் அவ்வப்போது அவனிடம் பகிர்ந்து கொள்வாள். அப்போதெல்லாம் கூட
அவளிடம் சகஜமாக பேச முடிந்த அவனால், தன் காதலை மட்டும் அவளிடம் சொல்ல முடியாமல்,தள்ளி போட்டு கொண்டு இருந்தான்.
இன்று மாலை ஆறுமணிக்கு ஆபீஸ் வேலை நேரம் முடிந்தவுடன், அருகில் இருந்த உணவு விடுதிக்கு அவளை வர சொல்லி இருந்தான்.
‘ஏன்? என்ன விஷயம்?!’ என்று அவள் சைகையில் கேட்க, ‘நேரில் சொல்கிறேன்’ என்று சைகையிலேயே பதில் சொல்லி விட்டான்.
கதிர் சரியாக ஆறு மணிக்கே கிளம்பி கேண்டீனுக்கு வந்து விட்டான். ஆனால் மாதுரி சற்று தாமதமாகத்தான் வந்தாள்.
“சாரி சார்… கிளம்பும் போது மானேஜர் ஒரு அவசர வேலையை கொடுத்துட்டார். அதான் கொஞ்சம் லேட்டாயிடுச்சு.”
“பரவாயில்ல… வாங்க அப்படி உட்கார்ந்து, காபி சாப்பிட்டுகிட்டே பேசலாம்.”
அந்த கேன்டீனில் ஓரமாக இருந்த ஒரு டேபிளில் அமர்ந்தனர். அவர்களை பார்த்ததும் ஒரு சர்வர் வந்து, இருவரும் சாப்பிட விரும்புவதை கேட்டு குறித்துக்கொண்டு போனார்.
அவள் முகத்தை தயக்கமாக பார்த்தபடியே கதிர் மெல்ல பேச ஆரம்பித்தான்.
“நான் உங்க கிட்ட பர்ஸனலா ஒரு விஷயத்தை பேசலாமேன்னு தான் வர சொன்னேன். நம்ம ஆபீஸ்ல உங்களோடுதான் அதிகமாக பேசி பழகி இருக்கேன். நம்ம வீட்டுல நடக்கிற விஷயங்களை கூட நாம பகிர்ந்து இருக்கோம். இப்ப எனக்கு வீட்ல பெண் பார்க்கிறாங்க.! அதை பத்தி உங்க கிட்ட கொஞ்சம் பேச நினைக்கிறேன்.”
அதுவரை சரளமாக பேசியவனுக்கு, மேற்கொண்டு பேச தயக்கமாக இருந்தது.
“ஓஒ! அப்படியா சார். சூப்பர் சார். நானும் இதை பத்தி உங்க கிட்ட பேசணுமுன்னு நினைச்சிட்டு இருந்தேன். நம்ம ரெண்டு பேருக்கும் நல்ல ஒற்றுமை சார்.”
மாதுரி அவள் அழகான விழிகளை விரித்து, மிக சந்தோசமாக பேசியதை கேட்டதும், கதிருக்கு வானத்தில பறக்கிற மாதிரி இருந்தது.
“சார்… எனக்கும் வீட்ல மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க. கொஞ்ச நாளா நானும் ஒரு மன குழப்பத்திலதான் இருக்கேன். என்னோட மேரேஜ் விஷயத்தில, என்னோட விருப்பம் என்னன்னு யாரும் கேட்க மாட்டேங்கிறாங்க.! அதனால நானும் இதை பத்தி உங்க கிட்ட பேசணுமுன்னு நெனைச்சிட்டு இருந்தேன்.”
கதிருக்கு அவள் சொன்னதை கேட்டதும், இன்னும் முகம் பிரகாசமானது. முதலில் அவள் மனசில இருக்கிறதை கேட்டு விட்டால்… அவன் வந்த வேலை சுலபமாக முடிந்து விடும் என்ற நம்பிக்கை வந்தது.
” ம்ம் .. சரி அப்ப நீங்க முதல்ல சொல்லுங்க”
“சார்… இப்பவும் ‘லேடிஸ் பர்ஸ்ட்’ங்கிற மாதிரி என்னை பேச சொன்னிங்க பாத்திங்களா… அது தான் எனக்கு உங்ககிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம். “
“பரவாயில்ல .. என்னை ரொம்ப பாராட்டாதிங்க. நீங்க சொல்ல நினைக்கிறத சொல்லுங்க.”
“சார், நீங்க என்னை நல்லா புரிஞ்சிட்டு இருப்பீங்கன்னு எனக்கு தெரியும். அதனாலதான் இதை கேட்கிறேன். எனக்கு வர போற மாப்பிள்ள எப்படி இருக்க வேணுமுன்னு நான் யோசிச்சு வெச்சிருக்கேன். அதை இப்ப உங்க கிட்ட சொல்றேன். அதை நீங்க கேட்டுட்டு… என் கல்யாண வாழ்க்கை எப்படி அமையணுமுன்னு ஆலோசனை சொல்லணும். எனக்கு அண்ணன் தம்பின்னு யாரும் இல்லை. உங்களைத்தான் கூட பிறக்காத அண்ணன் மாதிரி நினைச்சிட்டு இதை கேட்கிறேன்.”
படபட வென்று மாதுரி சொல்ல…
“கூட பிறக்காத அண்ணன் மாதிரி” என்று மாதுரி சொன்ன அந்த வார்த்தை…. கதிருக்கு ‘ஷாக்’ அடித்தது போல இருந்தது. இந்த திருப்பத்தை கொஞ்சமும் எதிர்பார்க்காத கதிருக்கு, குப்பென்று உடம்பெல்லாம் வியர்த்து… மனசு குழம்பியது.
“ஆனா, அது… அது வந்து… நான் என்ன சொல்ல வந்தேன்னா …”
அவனுக்கு நாக்கு குழறியது.
“ம்ம்..சொல்லுங்க…சகோ… இனிமே உங்களை சகோன்னு கூப்பிடலாமுன்னு இருக்கேன் என்று சொல்லி விட்டு அவள் கலகலவென்று சிரிக்க …. கதிருக்கு முகம் சுருங்கி அசடு வழிந்தது.
‘என்னை ஒரு சகோதரனாக பார்க்கும் அவளிடம், இனி அவனுடைய காதலை எப்படி சொல்வது?!’
கதிர் ஒரு பரிதாபமான பார்வையோடு அவளை பார்த்தான். பின்பு மெல்ல தொண்டையை செருமிக்கொண்டு
“நீங்க என்னை அண்ணன் போல நினச்சு கேட்டதிலே ரொம்ப சந்தோசம் மாதுரி!. எனக்கு கொஞ்சம் டைம் குடுங்க. நல்லா யோசிச்சு சொல்றேன்.”
என்று சொல்லி விட்டு முகத்தில் துளிர்த்த வியர்வையை கைக்குட்டையால் துடைத்துக்கொண்டான்.
‘இவ்வளவு நாளா அவளோட விழியசைவை, சைகையை சுலபமா புரிஞ்சுக்க முடிந்த எனக்கு, அவ மனசோட மொழியை தெரிஞ்சுக்க முடியலையே.!? நல்ல வேளை! அவள் முதல்ல பேசினதால நான் தப்பிச்சேன்!.’
என்று கதிர் மனசுக்குள் நினைத்து ஆறுதல் அடைந்தான்.
கருத்துகள் இல்லை