New

திருமண வாழ்கை



திருமண வாழ்கை

 திருமணமாகி பத்து வருடங்களுக்குப்பின் முகிலாவின் மனம் பதட்டமடைந்தது. அன்பைப் பொழியும் கணவன், பாசமான இரண்டு குழந்தைகள், தொழிலில் நல்ல வருமானம், சமுதாயத்தில் அந்தஸ்து, வீடு, வாகனம், கார், நகைகள் என குறையொன்றுமில்லாத வாழ்வைப்பெற்றிருந்தாள்.


கணவன் ஒரே வாரிசு என்பதால் கணவனது பெற்றோர் தன் மகளைப்போல மருமகளான தன்னைப்பார்த்துக்கொள்வதைப்பார்த்து பலர் பொறாமை கொண்டனர். குழந்தைகளையும் கண்ணும் கருத்துமாகப்பார்த்துக்கொண்டதால் கணவனது தொழிலுக்கு உதவியாக இருக்க முடிந்தது.

இப்படிப்பட்ட நிலையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் விருணை நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்தது. ‘ஹாய்’ என சொல்லி விட்டு வந்தவளை, வீடு வரை பின் தொடர்ந்து வந்தது அதிர்ச்சியாக இருந்தது.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் காதலித்தது உண்மைதான். சில இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்தது உண்மைதான். படிப்பு முடித்து இரண்டு பேருக்கும் வேலை கிடைத்ததும் திருமணம் செய்து கொள்வதாக சம்மதித்ததும் உண்மைதான்.

இறுதியாண்டு படிப்பை முடிக்காமல் சென்றவனை அதன் பின் அவளால் பார்க்க இயலவில்லை. அதே சமயம் அவன் இருக்குமிடம் தேடிச்செல்லத்தோன்றவும் இல்லை. அவனை மறக்க முடியாமல் கவலைப்பட்ட நிலையில், உறவினரான முகனின் பெற்றோர் பெண் கேட்டு வர, தன் மனமும் சரியென சொல்ல கற்பனை வாழ்வை விட்டு நிஜ வாழ்வில் அடியெடுத்து வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட, திருமணத்துக்கு சம்மதித்தாள்.

திருமண பந்தத்துக்குள் நுழைந்த பின் புதிய உறவுகள், பழக்கங்கள், நட்புகள் விருணை முழுவதுமாக மறக்கச்செய்திருந்தது. இதுவரை அவனைப்பார்ப்பதற்க்கான சந்தர்ப்பமும் ஏற்படவில்லை. தற்போது திடீரென ஒரு வில்லனைப்போல தன்முன் தாடியுடன் வந்து நிற்பான் என கனவிலும் நினைக்கவில்லை.

மதியம் பனிரெண்டு மணிக்கு சமையல் முடிந்து சற்று ஓய்வெடுக்க படுக்கையறை சென்றவள் வாட்ஸ்அப் மெஸேஜ் பார்க்கும் போது அவனது புகைப்படத்துடன் இருந்த பதிவை பார்த்தாள்.

‘முகி எப்படி இருக்கே….? நீ சூப்பராத்தான் இருக்கே….? ஆனா நான்….‌ ‘என முடித்திருந்தான்.

மனதில் ஒருவிதமான கலக்கம் ஏற்பட உடல் நடுங்கியது.

‘இவனை எப்படி சமாளிப்பது? நன்றாகச்செல்லும் நம் வாழ்வை நாசம் செய்து விடுவானோ….? இவனுக்கு நமது நெம்பர் எப்படி கிடைத்திருக்கும்? நமக்குத்தெரிந்த யாராவதிடம் வாங்கியிருந்தால் அவனை நாம் காதலித்ததை அவர்களிடம் கூறியிருப்பானோ..‌.?’ என கவலை கொண்டாள்.

“இருந்தா முகிலா மாதிரி இருக்கோணும். முகன் கொடுத்து வெச்சவன். கல்யாணமாயி பத்து வருசமாச்சு காதல், கத்திரிக்காய்னு அவளப்பத்தி எந்த செய்தியும் வெளில வரல. இதுக்கு காலேஜ் வெரைக்கும் போயி படிச்சிருக்கா. அழகா வேற இருக்கா. ஆனா சில பொண்ணுங்க ஸ்கூல் லெவல்லியே காதல்னு படிப்பக்கெடுத்துட்டு கெட்ட பேரு வாங்கிடறாளுக…. அப்புறம் வேற ஒருத்தன கல்யாணம் பண்ணின பின்னாடி பழைய லவ்வரால பிரச்சினை வந்து டைவர்ஸ் லெவலுக்கு போயிருது….” என ஒரு பெட்டிக்கடையருகே நின்று இரண்டு நபர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட விருண், முகிலாவின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ‘உடனே சந்திக்க வேண்டும், வரவில்லையேல் நாம் ஜோடியாக எடுத்த புகைப்படங்களை எனது முகநூலில் வெளியிடுவேன், உன் கணவனது வாட்ஸ்அப் எண்ணுக்கும் அனுப்பி விடுவேன்’ என அனுப்பிய பதிவை டெலிட் செய்து விட்டு அவளை சந்திக்க கோவை வந்தவன் உடனே சென்னை செல்லும் பேருந்து நிலையம் செல்ல நகர பேருந்தில் ஏறினான்.




கருத்துகள் இல்லை