கர்வம் கொள்ளேல்
![]() |
கர்வம் கொள்ளேல் -arrogant |
கர்வம் கொள்ளேல்
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாராம். அந்த ராஜா ஒவ்வொரு வருடமும் முதல் தேதியில் ஊர் மக்களுக்கு ஒரு போட்டி வைத்து, போட்டிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆறுதல் பரிசும், வெற்றி பெறும் நபருக்கு ஒரு சிறப்புப் பரிசும் தருவாராம்.
அந்த வருடமும் ஆறு நபர்களை (மூன்று ஆண், மூன்று பெண்) தேர்வு செய்து, அதில் வெற்றி பெறும் ஒருவருக்கு பரிசு தர நினைத்துப் போட்டியை தொடங்கினார்.
தேர்வு பெற்ற பெண்கள் நாம் தேர்வு பெற்று விட்டோம் என்ற கர்வத்தில் இருந்தனர். தேர்வு பெற்ற ஆண்கள் பெண்களால் தங்களை வெல்ல முடியாது என்ற தலைக்கனத்தில் இருந்தனர்.
போட்டி துவங்கியது. பெரிய பழைய ஒரு மர பீரோ வைக்கப்பட்டிருந்தது. அதை ஒரே முறையில் திறக்க வேண்டும். அதுதான் போட்டி. பக்கத்தில் நிறைய சாவிகள் இருந்தன.
தேர்வான ஆண்களும் பெண்களும் சாவிகளை பார்ப்பதும், பீரோவை பார்ப்பதுமாக, நேரத்தை கழித்து கொண்டிருந்தனர். தலைக்கனம் மிகுந்த ஆண்களும், கர்வம் கொண்ட பெண்களும், எது சரியான சாவி என யோசித்து, யோசித்து குழம்பிக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் வேடிக்கை பார்க்க வந்த ஒரு பெண் வந்து, நான் இந்தக் பீரோவை திறக்க முயற்சி செய்யலாமா எனக் கேட்டாள். ராஜா யோசித்தார்.
மந்திரி… புத்திசாலிகள் என்று தேர்வு செய்த இவர்களால், முடியாத இந்த விஷயத்தை நீ செய்து விடுவாயா? சரி …பொழுது சாயும் நேரம் ஆகிறது. முயற்சி செய்து பார் மகளே என்றார் மந்திரி. ராஜா அதை ஆமோதித்தார்.
அந்த பெண் விரைந்து பீரோவின் அருகே போனாள். தனது இரு கைகளாலும் பீரோவின் ஒரு கதவை அழுத்தி இழுத்தாள். பீரோ கதவு மெல்லத் திறக்கக் துவங்கியது..
கூடியிருந்த அனைவருக்கும் மிக்க ஆச்சரியமாக இருந்தது. பீரோ பூட்டப்படவே இல்லை என்று புரிந்தது.
மன்னர் அப்பெண்ணை அழைத்து எப்படி பீரோ பூட்டப்படவில்லை என்று கண்டறிந்தாய்? என்று கேட்டார்.
“எளிது மன்னா.சாவிகளை பார்த்தேன். அத்தனை சாவிகளும் மிகவும் புதிதாக இருந்தன. பீரோவோ மிகப் பழையது. இத்தனை புதிதான சாவிகள் இருக்க வாய்ப்பில்லை. அதோடு பீரோவின் ஓட்டை சதுரமாக இருந்தன. சாவிகளோ உருண்டை வடிவில் இருந்தன. அதனால் இதில் பீரோவின் சாவிகள் இல்லை என முடிவு செய்தேன் அதனால் பீரோ பூட்டப்படவில்லை. வெறுமனே அழுத்தி சாத்தப்பட்டு இருக்கிறது என்று புரிந்து கொண்டேன்”,என்றாள் அந்தப் பெண்.
தேர்வான ஆண்களும் பெண்களும், தங்கள் ஆணவமும் தலைக்கனமும், தங்கள் அறிவுக்கண்களை மறைத்து விட்டதை, எண்ணி வெட்கி தலைகுனிந்தனர். தங்களின் ஆணவத்தால் ஒரு சாதாரண விஷயம் கூட, நம் புத்திக்கு எட்டவில்லை என வருந்தினர்.
அரசர் அந்தப் பெண்ணுக்கு ஒரு நல்ல வீடும், தனது அமைச்சரவையில் ஒரு நல்ல பதவியும் அளித்து கௌரவித்தார்.
கர்வமும் , தலைக்கனமும் எப்போதும் கூடாது .அவை இருந்தால் தன் சுய புத்தி ஒருபோதும் வேலை செய்யாது, என்ற உண்மை இக்கதையின் மூலம் விளங்குகிறது
கருத்துகள் இல்லை