sirukathaigal

மது பிரியரே..

மதுரை,

ஜெய்ஹிந்த்புரம் , முதல் தெரு , சின்ன சின்ன வீடுகளை அடுத்தடுத்து கொண்ட காம்பவுண்ட் வீடுகள். எதிர் எதிரே 5 வீடுகள். மார்கெட்டில் இருக்கும் சப்தத்தை போல இருந்தன.

கடைசி வீடு , ஆறாம் வகுப்பு படிக்கும் ரேணுகா , தன் அம்மா மீனாட்சியிடம் கண்ணீர் மல்க பேசி கொண்டு இருந்தாள்.

“ நான் ஸ்கூல்க்கு போக மாட்டேன். இன்னைக்கு உன்னையும் அப்பாவையும் டீச்சர் கூட்டிட்டு வர சொல்லிருக்காங்க. நீங்க ரெண்டு பேரும் வந்தா தான் போவேன். என் கூட இருக்கிற எல்லாரும் அவங்க அப்பா அம்மாவ கூட்டிட்டு வந்து பேசிட்டு போய்ட்டாங்க. நான் மட்டும் தான் கூட்டிட்டு வரலன்னு சொல்லி, நேத்து டீச்சர் சத்தம் போட்டு விட்டாங்க.” என்று ரேணுக கூறினாள்.

“ரேணு, நானும் நீயும் போவோம். உங்க அப்பா வரமாட்டார்னு உனக்கு தெரியும்ல, பிறகு என்ன அவர கூட்டிட்டு போகணும்னு நீ சொல்ற. சாயந்திரத்திற்கு மேல அவரு ரெண்டு ஆளா இருப்பாரு. அதுக்காக காலையில நல்ல மனுஷன் மாதிரி வேலைக்கு போய்ட்டு , வாங்கிற சம்பளத்தில் தண்ணிய போட்டு , மீதி இருந்தா வீட்டுக்கு காசு வரும். இல்லைன்னா அதுவும் இல்லை. உங்க டீச்சரை பார்க்க நான் வர்றேன் “ என்று மீனாட்சி கூற,

ஏதாவது பண்ணி தொலைம்மா என்று சலித்தபடி , இருவரும் பள்ளிக்கு கிளம்பினர்.

அரசு பள்ளி ,

ஆசிரியர் அறையை நோக்கி சென்றனர்.

அங்கே அமர்ந்து இருந்த ரேணுகாவின் வகுப்பு ஆசிரியை மாலதி.

தாய் மீனாட்சி பதட்டத்துடன் , “ நான் ரேணுகா பொண்ணோட அம்மா டீச்சர் , பேசணும்னு ஸ்கூல்க்கு வர சொன்னதா பாப்பா சொன்னா !“ என்று மீனாட்சி தயங்கியபடி கூறினாள்.

“ரேணுகா அம்மா அப்பா ரெண்டு பேரையும் நேர்ல வர சொன்னேன். அவளோட படிப்பு வர வர மோசமா போய்ட்டு இருக்கு. காரணம் கேட்டா தினமும் அவங்க அப்பா குடிச்சிட்டு வந்து வீட்ல பிரச்னை பண்றதா சொல்றா. உங்களையும் , ரேணுகாவையும் அடிக்கிறதா சொல்றா. அதான் வர சொல்லி பேசலாம்ன்னு கூப்பிட்டேன். மற்ற பிள்ளைகளோட அம்மா அப்பா எப்போ கூப்பிட்டு விட்டாலும் வந்துருவாங்க. நீங்க மட்டும் தான் வர்றது இல்லை.ஏன் உங்க பொண்ணு வாழ்க்கையில நல்லா வரணும்னு உங்களுக்கு ஆசை இல்லையா?” என்று ஆசிரியை மாலதி கூறியதும்,

“ஐயோ டீச்சர் அப்படி சொல்லாதிங்க , என் புள்ளை நல்ல நிலைமைக்கு வரணும் அது தான் என் ஆசை , ஆனா அவ அப்பன் தினமும் குடிச்சிட்டு வந்து வீட்டையே ரெண்டாக்கி விட்டுறான். குடியில இருந்து அந்த ஆள மாத்த எவ்ளோ முயற்சி பண்ணிட்டோம், நாங்க ரெண்டு பேரும் மருந்து குடிச்சி சாக போய்ட்டோம் , பக்கத்துல இருந்துவங்க ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் காப்பாத்தி விட்டாங்க. அந்த ஆளு இதுக்கு மேல திருந்த வாய்ப்பு இல்லை. என் புள்ள நல்ல படிக்கணும் நீங்க தான் டீச்சர் உதவி புரியணும். நம்ம அரசாங்கம் எங்க ஏரியால ரெண்டு மூணு  ஒய்ன்ஷாப் திறந்து வச்சிருக்கு , இப்படி இருந்தா என்ன பண்ணமுடியும் சொல்லுங்க டீச்சர்.” என்று தன் கவலைகளை கூறினாள் அம்மா மீனாட்சி.

“சுய கட்டுப்பாடு இல்லாத உன் புருசனுக்காக அரசை குத்தம் சொல்ல கூடாது. அரசாங்கம் விக்கிறதால தான் குடிக்கிறாரா , மருந்து கடைகள் தெருவுக்கு தெரு இருக்கிறது , அதுக்காக மருந்து வாங்கி குடிப்பாரா! களவும் கற்று மற , அவ்ளோதான். இவங்களால மறக்க முடியல. உங்க உயிர் மேல அக்கறை இல்லை அவருக்கு , நான் சொல்றத கேளுங்க பார்ப்போம் “ என்று அவர்களிடம் ரகசியாமாக பேசி வீட்டுக்கு அனுப்புகிறாள் ஆசிரியை மாலதி.

மாலை 5 மணி அளவில் ,

ஜெய்ஹிந்த்புரம் , மெயின் ரோடு , அங்கே இருக்கும் மது பான கடை.

வேலை முடிந்து நேராக தன் சைக்கிளை அந்த கடையின் முன் நிறுத்தினான் சுந்தரம்.

ஐந்து மணி என்பதால் கூட்டம் இருக்காது. சுந்தரம் அந்த கடையின் தின வடிக்கையாளர். தனி கவனிப்பு.

நேராக உள்ளே இருந்த பாரில் நுழைந்தான். அங்கே இருந்த சிறுவன் ஒருவனை பார்த்து , நம்ம சரக்கு சைடிஷ் கொண்டு வாடா என்றான்.

அவன் டேபிள் முன் அமர்ந்தான்.

அவன் கேட்ட சரக்கு சைடிஷ் வந்தது. மெதுவாக ஊற்றி குடிக்க ஆரம்பித்தான்.

அதுவரை அமைதியாக இருந்த பாரில் , சல சலப்பு கேட்க ஆரம்பித்தது.

சலசலப்பு சப்தம் தன் முன் வரிசையில் இருந்து வந்தது.

எரிச்சல் அடைந்தான்.

“யார்ரா அவன் , இங்க வந்து கொஞ்சி கொஞ்சி பேசுறது , வெளிய போங்கடா , வந்தோமா குடிச்சோமா , போதை தலைக்கு மேல வந்துச்சா கெளம்பி போனோமா ன்னு இருக்கணும் , அத விட்டு இங்க வந்து பொம்பள கூட உட்காந்து கொஞ்சுற மாதிரி சப்தம் கொடுத்தா நல்லாவா இருக்கு “ என்று கூற ,

முன் வரிசையில் இருந்த இரு நபர்கள் ,

“ நான் காசு கொடுத்து கூட்டி வந்தேன் இவங்கள நான் கொஞ்சுவேன் என்ன வேணாலும் பண்ணுவேன், உனக்கு என்ன எரியுதா. நீ என்ன அவ புருசனா ? “ என்று அவர்கள் கூறிய படி , சுந்தரத்தை நோக்கி பாய்ந்தனர்.

சுந்தரமும் சும்மா விடுவானா , அவன் இரு மனிதனாக மாறி கொண்டிருந்த நேரம் , அவனும் அவர்களை நோக்கி பாய்ந்தான்.

கைகலப்பு ஆனது.

இவர்களின் சண்டையை இறுதியில் நிறுத்த , அந்த பெண்கள் எழுந்து வந்தனர்.

அந்த பெண்கள் வேறு யாரும் இல்லை. மாணவி ரேணுகா , அவளின் அம்மா மீனாட்சி.

“ அய்யா சண்டை வேணாம் விடுங்க , எங்களுக்கு நீங்க காச கொடுங்க நாங்க போயட்ட்றோம்” என்று மீனாட்சி கூற .

மீனாட்சியின் அருகில் இருந்தவன் , “என்னம்மா எதுவுமே பண்ணல , அதுக்குள்ள காச கேட்கிற , நீ வேணா போ , அந்த சின்ன பொண்ண விட்டுட்டு போ , கொஞ்ச நேரம் கழிச்சு அனுப்பி வைக்கிறேன் “ என்று அந்த நபர் கூறி , பையில் இருந்து பணத்தை அவளின் மீது வீசினான்.

நிற்பது தன் மனைவி மீனாட்சி மகள் ரேணுகா என்று தெரிந்து கொள்ள அவ்வளவு நேரம் ஆனது சுந்தரத்திர்க்கு.

“அடியே , இங்க என்ன பண்ற , உனக்கு என்ன பைத்தியாமா , நீ வேசியா மாறிட்டியா? “ என்று போதை தெளிந்தவனாக பேச ஆரம்பித்தான்.

அவன் பேசும் போதே மகள் ரேணுகாவின் அருகில் இருந்த மற்ற ஒரு நபர் , ரேணுகாவை கட்டிபிடித்தான்.

அதை பார்த்த சுந்தரம் கொந்தளித்து அந்த இரு நபர்களை பாட்டிலை உடைத்து குத்த சென்றான்.

அவனை தடுத்து நிறுத்தினாள் மீனாட்சி.

“நாங்க ரெண்டு பேரும் செத்தா என்ன ? வாழ்ந்தா உனக்கு என்ன ? உனக்கு தேவை குடி மட்டும் தான , நாங்க சாப்பிட்டோமா? தூங்கினோமா? ன்னு என்னைக்காவது நினைச்சி பார்த்திருப்பியா.குடிச்சிட்டு வருவ , நல்லா சாப்பிடுவ , அப்புறம் எங்களை அடிப்ப , உன்னை கல்யாணம் பண்ண பாவத்திற்கு என்னை அடி , அத விட்டு அந்த பச்சை பிள்ளையும் அடிக்கிற. அதான் நாங்க ஒரு முடிவு எடுத்துட்டோம் , நாங்க உயிர் வாழ இந்த வேலை பார்க்க போறோம் , உடம்ப வித்து வாழ போறோம். அதுல நெறைய காசு வரும்னு சொன்னங்க. காசு வந்தா நீ நெறைய குடிக்கலாம்ல. நீ நெறைய குடிக்கனும்ன்ற உன் ஆசைய நிறைவேத்த தான் உன் பொண்ணும் இந்த வேலைக்கு வாரேன்னு சொல்லிட்டா.” என்று மீனாட்சி கூறி கண்ணீர் மல்க கதறினாள்.

அந்த சம்பவம் , சுந்தரத்தின் மூளையை குடைந்தது.

தன் தவறை உணர ஆரம்பித்தான்.

இருப்பினும் தன் மனைவி மகளின் இந்த முடிவு அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை.

அந்த இரு நபர்கள் இவர்களை விடுவதாக இல்லை.

“கொடுத்தா காசுக்கு ஒழுங்கா கொஞ்ச நேரம் இருந்துட்டு போயிருங்க , அவ்ளோதான், வாடி “ என்று இருவரும் மீனாட்சி மற்றும் மகள் ரேணுகாவை இழுத்து அணைக்க முற்பட்டனர்.

தன் கண் முன்னாடி நடப்பது கனவாக இருக்க கூடாதா ?

கட்டிய மனைவி , பெத்த மகள் தன் கண் முன்னே யாரோ ஒருவன் கட்டிபிடிப்பதை தன்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.

கண்கள் சிவந்தன – கையை இரும்பு பிடி போன்று மாற்றினான் சுந்தரம்.

உங்கள சும்மா விட மாட்டேன்டா என்று பொங்கி எழுந்தான்.

“சார் , கொஞ்ச நேரம் பொறுங்க , நாங்க ரெண்டு பேரும் உங்க மக ரேணுகா படிக்கிற ஸ்கூல் வாத்தியார்ங்க. உங்கள குடியில இருந்து திருத்தனும்னு நாங்க போட்ட நாடகம் இது. “ என்று அந்த இரு நபர்களும் கூற ,

இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாதவனாய் இருந்தான் சுந்தரம்.

“சார் , நீங்க ஒருத்தர் குடிப்பதால் உங்க குடும்பம் முழுதும் பாதிக்க படுது , குடிப்பதால் உங்க உடம்பு மட்டும் கெட்டு போக போறது இல்ல , உங்களை நம்பி இருக்கிற குடும்பமும் தான் பாதிக்க பட போகுது. வரும் தலைமுறையினருக்கு நல்லது சொல்லி தரலன்னாலும் பரவா இல்ல , இது போன்ற போதை பழக்கங்களை சொல்லி கொடுக்காதிங்க. மது ஒழிப்பு அரசாங்கத்தால மட்டும் சாத்தியம் கிடையாது , உங்களை போன்ற மது பிரியர்களின் கையில் தான் இருக்கு “ என்று பள்ளி ஆசிரியர்கள் பாடம் நடத்தினார்கள்.

 கண்களில் கண்ணீர் தரைதாரையாக வந்து கொண்டு இருந்தது சுந்தரத்திற்கு.

தன் மகள் மற்றும் மனைவியை கட்டிபிடித்து , அந்த ஆசிரியர்களுக்கு நன்றி கூறி விட்டு அங்கு இருந்து கிளம்பினான் சுந்தரம்

குடிப்பதை மறந்து , குடும்பத்தை நினைத்து மகிழ்ந்து வாழ்வேன் என்ற நோக்கில் அந்த மதுக்கடையில் இருந்து வெளியில் வந்தான் சுந்தரம் , தன் குடும்பதுடன்.

களவும் கற்று மற.

போதை மிகவும் மோசமானது. வாழ்க்கையை அழித்துவிடும்.

                                                                                                                                                   முற்றும்.

கதை ஆசிரியர்: மணிராம் கார்த்திக்


                                                                                                                   சிறுகதை : மணிராம் கார்த்திக்  

காமாட்சி அம்மன் கோயில் தெரு, மேல அனுப்பனடி, மதுரை

இந்த கதை என் சொந்த கற்பனை கதை , என்பதை உறுதி அளிக்கிறேன்




கருத்துகள் இல்லை

"Please be respectful. Anonymous comments are allowed."