New Stories

நானும் ஜன்னலும்

நானும் ஜன்னலும்-Me and the window


நானும் ஜன்னலும்

 பள்ளிக்கூடங்களும், பாடங்களும், புத்தகங்களும் வாழ்வைக் கற்றுத்தந்ததைவிட, இயற்கை மூலம் நாம் அதிகமாக அறிந்து கொள்கிறோம் என்பதில. எந்தவொரு மாற்றுக் கருத்தும் இருக்கமுடியாது.


என்னைப. பொறுத்தவரையில், என்வீட்டு ஜன்னல் வழியாகத்தான் ஒரு புதிய உலகம் என்பது எனக்குப் பரிச்சயமானது.

3/120 அரு. வீதியில் இருந்த கானாடுகாத்தான் வீடு, எனது பிறப்பிடம் மட்டுமல்ல… என்னை வழிநடத்திச் சென்ற ஒரு என்சைக்ளோபீடியா என்பேன்!  நிச்சயமாக, நிறையக் கோணங்களின் வழியே, எனது பார்வையை விரிவுபடுத்திய ஒரு பூதக்கண்ணாடி!  அந்த வீட்டில் “உள்” என்று நாங்கள் அழைத்த ஒரு அறைஇருந்தது. அந்த உள்ளில் இருந்த ஜன்னல் எனக்கு ஒரு போதிமரமாகத் திகழ்ந்தது!  

கொஞ்சம் எக்கி நின்றால் மட்டுமே ஜன்னல் தெரியும் வயதில் நான் இருந்தபோது, உண்மையிலேயே அந்த ஜன்னல் எனக்கு அத்தனை சுவாரஸ்யமாக இருந்தது.  ஆம்! இன்றளவில் எனது நெஞ்சில் பசுமை மாறாமல் அந்தஜன்னல் இருப்பது நிஜம்!  அந்த ஜன்னல் மூலமாகத் தானே எனது வெளி உலகத்தோடு எனது தொடர்பு துவங்கியது!

அந்த நாட்களில், அந்த ஜன்னலின் வழியே என்ன நடக்கிறது, என்ன தெரிகிறது என்று தெரிந்து கொள்ளும் ஆவல் என்னை ரொம்பவே ஆக்கிரமித்திருந்தது.  ஒரு ஸ்டூலைப் போட்டு, அதில் ஏறி அந்த ஜன்னல் வழியே பார்த்தால்…அடேங்கப்பா! ஏகப்பட்ட ஜனங்கள் எதிரும் புதிருமாக வருவதும் போவதும்…ஜன்னலை ஓட்டி அகழி மாதிரி, மழைத்தண்ணீர் வடிந்து செல்லும்படி இருக்கும்.  தெருவைக் கடந்த எதிர்ப்புறம் சிகப்பி ஆச்சி வீட்டின் வெளிச்சுவர்…

ஆகாசத்திற்கும் எனக்கும் இந்த ஜன்னல் மட்டுமே இருப்பதாக எண்ணிக் கொள்வேன்.  இந்த ஜன்னலை எடுத்து விட்டால், காற்றில் மிதந்தபடி நானும் ஒரு மேகம் போல ஊர்ந்து செல்வேனோ என்று சற்றே விசித்திரமாகத் தோன்றும்!  இப்படிப் பகலில், ஒரு தொலைக்காட்சிப்பெட்டி போல எல்லா விதமான  காட்சிகளையும் காட்டி நமக்கு ஒரு பொழுதுபோக்கு அம்சமாக விளங்கும் அந்த ஜன்னலை, அந்தி சாயும்நேரம் மூடித் தாழ் போட்டு விடுவார்கள்.

நானும் ராஜாவும், அநேக நாட்கள் அந்த ஜன்னலின் அருகே அமர்ந்து உலகமகா விஷயங்களை மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம்.  அம்மா செய்துதரும் ஓம்ப்பொடியைச் சிறு கிண்ணங்களில் போட்டுக் கொண்டு, அதில் கேள்விக்குறி இருக்கா, எட்டு மாதிரி அல்லது சுழி மாதிரி இருக்கா என்று இடையிடையே ஆராய்ச்சி வேறு செய்து கொண்டிருப்போம்.

அந்த ஜன்னலுக்கு வெகு அருகே, அப்பா செய்த பெரிய மரநாற்காலி இருக்கும்.  இந்திராணியின் ஆஸ்தான இருக்கை அதுதான்.  தோதாக, அரசி ட்ரம்மிலிருந்து ரப்பர்சம்பா அரிசியை வாயில் அடக்கிக் கொண்டு, ஒரு நாவலில் மூழ்கியிருப்பாள்.  அதே உள்ளில், சுவற்றை ஒட்டி ஒரு ஊஞ்சல், சகலவிதமான பொக்கிஷங்களையும் தாங்கியபடி இருக்கும்.  ஊஞ்சலின் ஒரு பக்கம், காபிப்பொடி அரைக்கும் மிஷின் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும்.  அவ்வப்போது அம்மா காபிப்பொடி அரைக்கச் சொல்லும் போது ஏகத்துக்கும் எரிச்சல் வரும்.  அந்த வேலையை வேண்டா வெறுப்பாகச் செய்வேன்! பின்னே?  

நொறுநொறுவென்று இருக்கும் பொடியை, திரும்பவும் நைசாக அரைக்கும்படி சொன்னால்…எரிச்சல் வராதா?  இதனால் ஜன்னல் காட்சிகள் தடைபட்டுப் போகிறதே என்று சின்னதாக ஒரு கோபமும் எட்டிப் பார்க்கும்.

ஆனால், அதே சமயம் அந்த உள்ளின் ஓருபக்கமாய் இருந்த கள்ளியம்பெட்டியைத் திறக்க அம்மா வந்தால் உடனே சூழ்ந்து கொள்ளுவோம்.  ஒரு கல்கண்டு, முந்திரி என்று அம்மா எடுக்கும்போது, தர மாட்டாரா என்கிற நப்பாசை தான்! 

கானாடுகாத்தானிலிருந்து திருச்சிக்கு வந்தபிறகு வசித்த 8b/9 கல்யாணிவிலாஸ் வீட்டு ஜன்னலும் மனதுக்குப் பிடித்துப்போனது! கிராமத்து மணம் மாறாமல் எந்தவொரு exposure—ம் இல்லாமல் வளர்ந்த படியால், திருச்சியை அநியாயத்துக்கும் பிடித்துப் போனது.  சிறிய வீடு..சின்னஞ்சிறிய ஜன்னல்…அவ்வளவு ஏன்? தண்ணீர் கூட அளந்துஅளந்து பக்கெட்டில்…ஆனாலும் அந்த வீட்டு ஜன்னல் எங்கள் அனைவருக்கும் ஒரு பயாஸ்கோப் மாதிரி இருந்தது என்பேன்!

மலைக்கோட்டையைப் பார்க்கவரும் சுற்றுலாப் பயணிகளை, குறிப்பாக வெளிநாட்டவர்களை அந்த ஜன்னல் வழியே வேடிக்கை பார்ப்பது, எனக்கு வாடிக்கை ஆனது.  அந்த ஜன்னல் தந்த வெளிச்சத்தில் அப்பா ஒரு சாய்வுமேசையில், பிரபாத் டாக்கீஸின் லெட்ஜரை வைத்துக் கொண்டு, வரவுசெலவுக் கணக்கு எழுதிக் கொண்டிருப்பார். அந்த வெளிச்சத்தில் எனது ஷார்ட்ஹாண்ட் பயிற்சி நடக்கும்;

ராஜா சேகரின் வீட்டுப்பாடங்கள் நடக்கும்; பேபியின் உஷா தையல்மெஷின் அதுபாட்டுக்கு ஒடிக் கொண்டிருக்கும்.

இப்படியாக, எனது இளம்பருவத்து நாட்களின் ஆதாரஸ்ருதியாக இந்த ஜன்னல்கள் இருந்தன என்பது நிதர்சனமான உண்மை!  மரச்சட்டங்களால் சிறைப்பட்டுக் கிடந்தாலும்,பசுமையான காட்சியை,  சிதறுகின்ற தூறலை, பெருத்த மழையை, தலையாட்டும் மரங்களை, பூக்காரியை, தள்ளுவண்டியில் காய்கறி விற்பவரை, ஐஸ்வண்டியை, விளையாடும் சிறுவர்களை, வளையல் விற்பவரை, விறகு சுமந்து வருபவரை,மாட்டு வண்டியை, பொதி சுமந்துவரும் கழுதையை, சினிமா நோட்டீஸ் போடும் வண்டியை அரசியல் கட்சிகளின் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை, பல்லக்கில் பவனிவரும் கடவுளர்களை, பள்ளிச் சிறுவர்களை, நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டத் தவறியதே இல்லை!

நம் அனைவரையும் இயற்கையோடு எப்போதும் தொடர்பு கொள்ள வைப்பது ஜன்னல் தானே?  அதுவும் உலகத்தையே ஆட்டிப்படைத்த கொரோனா சமயத்தில், வெளியே போகமுடியாமல் முடங்கிக் கிடந்தபோது, இந்த ஜன்னல்கள் அல்லவா நமக்குப் பெரிய பொழுதுபோக்காக இருந்தது! 

வாழ்க்கைப்பயணத்தில், எத்தனையோ இடங்களில் வசிக்கும்படி இருந்தாலும், அந்தந்த வீட்டு ஜன்னல்களோடு எனது வெளி உலகம் விரிந்திருக்கறது.  அதனால் எனது தொலைநோக்குப் பார்வையும் வானம் தொட்டுவிடும் தூரம்தான் என்கிற அளவில் பரந்திருக்கிறது.  ஜன்னல் வழியே சூரியனையும் சந்திரனையும் பார்க்கச் சலிப்பதே இல்லை.  

சமீபத்தில் கனடா சென்றபோது, பரத்தின் ஓக்வில் வீட்டுஜன்னல் வழியே, ரிஷிக்குட்டிக்கு வேடிக்கை காட்டும்போது பரவசமாக இருக்கும். எதிர்வீட்டு மனிதர்களும், வீதியில் சைக்கிள் விடும் குழந்தைகளும் நடைப்பயிற்சி செய்பவர்களும், அசைந்தாடும் மரங்களும் பூக்களும், காட்சிகளுக்குப் பஞ்சமே இல்லை!  அதேபோல் ஜெனீவாவில் அம்முலு குடியிருந்த வீட்டு ஜன்னல் வழியே, எதிர்வீட்டு ஜன்னல் தெரியும்.  அதிகாலை வேளையில் சின்னஞ்சிறு தவிட்டுக்குருவிகள் கீச்சுகீச்சென்று சப்தமிடும்போது அது காற்றினிலே வரும் கீதமாக இருக்கும்.  அது இன்னமும் மனதைவிட்டு மறையவில்லை.

இந்தப்பதிவைக் கூட, ஜயந்த்தின் iyers @ 89 வீட்டிலிருந்துதான் (சிங்கப்பூர்) எழுதுகிறேன்.  

விருந்தினர் அறையின் ஜன்னல்வழியே விரிந்த ஆகாயமும், நெடிதுயர்ந்த வீடுகளும், பசேல் என்ற செடிகொடிகளும். வண்ண விளக்குகளும் மனதுக்கு உற்சாகமூட்டுகின்றன.  அழகான ஒரு நகைப்பெட்டி போல் அந்த இரவிலும் சிங்கப்பூர் ஒளிர்கிறது!

எண்சாண் உடம்புக்குச் சிறுகண்கள் எம்படியோ, அதுபோல் இந்த ஜன்னல்களும், குடிசை,  கோபுரம், மாளிகை என்று அனைத்திலும் தன்னைப் பொருத்திக் கொண்டு ஒரு இணைப்புப் பாலமாக விளங்குகிறது.  ஜன்னல் என்பது, வீட்டின் ஒரு அங்கமாக மட்டுமில்லாமல், நமது மனதைக் குளிர்வித்து, நிரந்தரமாகச் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்ளும் ஒரு சிநேகமான பந்தம் என்பேன்!

நினைத்துப் பார்க்கிறேன்…

உலகம் முழுவதும் வீடுகள் இருக்கின்றன.  எல்லா வீடுகளிலும் ஜன்னல்கள் இருக்கன்றன.  

ஒவ்வொரு ஜன்னலுக்குப் பின்னாலும், என்னைப் போலவே ஒரு சிறுமியோ, சிறுவனோ அந்தப் புரிபடாத வாழ்க்கைச் சித்திரங்களைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் தானே

Sirukathai | sirukathaigal | Tamil kathaigal | சிறுகதைகள் | சிறுகதை | தமிழ் சிறுகதைகள் | tamil story books | best story | tamil stories | Best stories

கருத்துகள் இல்லை