பொறந்த வீடு
பொறந்த வீடு
மதுரை – மீனாட்சி சுந்தரம் தெரு ,
வீட்டு காலிங் பெல் சப்தம் கேட்டது. கதவை திறக்க மல்லிகா வேகமாக சென்றாள். கதவை திறந்தாள். வெளியில் மகள் சுகன்யா. கையில் பெட்டியுடன். “வாம்மா , சுகன்யா. உன்னை வீட்டுக்கு வர வைக்கிறதுக்கு எவளோ போராட்டம் “ என்று கூறிய படி , பெட்டியை வாங்கி உள்ளே அழைத்தாள் மல்லிகா.
“மேகலா , டீ போட்டு கொண்டு வா. சுகன்யா வந்திருக்கா “ என்று அடுப்பங்கரைக்கு ஒரு குரல் கொடுத்தாள் மல்லிகா. இருவரும் அந்த ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தனர்.
“ஏண்டி, கல்யாணம் முடிஞ்சு நாலு மாசம் ஆச்சு. விருந்துக்கு வந்து போனதோடு சரி , அதுக்கு பிறகு உன் மாமியார் உன்னை நம்ம வீட்டுக்கு அனுப்ப மாட்டேங்கிறா” என்று கோவமாக மல்லிகா கூறினாள்.
“அத ஏன்மா கேக்குற. நான் உன்னை மாமியார் மாதிரியா பார்த்துக்கிறேன் , உன் அம்மா மாதிரி பார்திகிறேன் , பின்ன என்ன வேணும்ன்னு சொல்லியே, என்னை வீட்டுக்கு விட மாற்றாங்க. என் புருசன்ட சொன்னா , போவோம்ன்னு சொல்லிட்டு அவர் வெளியில போய்றாரு.” என்று ஆதங்கமாய் பேசினாள் சுகன்யா.
“உன் மாமியார் உன்ன வச்சு எல்லா வேலை பார்க்கனும்னு முடிவு பண்ணிட்டா. அவ சும்மா வீட்ல உட்கார்ந்து அடுத்தவங்கள வேலை ஏவனும்னு முடிவு பண்ணிட்டா. அதான் உன்ன வெளியில விட யோசிக்கிறா. கேட்டா அம்மா மாதிரி , அம்மா மாதிரி என்று சொல்றா!.” என்று மல்லிகா கூறினாள்.
“அம்மா மாதிரி தான், அத்தை நீங்க, ஆனா உண்மையாவே என் அம்மா ஆக முடியாதுன்னு நானும் சொல்லிட்டேன். கேட்க மாட்றாங்க. இப்பவே பாரு உனக்கு உடம்பு முடியலன்னு பொய் சொல்லி வர வச்சிருக்கீங்க.” என்று கவலையோடு சுகன்யா.
“விடு , வந்துட்ட. இனி நாலு நாள் இங்க இரு. நான் பேசிக்கிறேன். உன் மாமியார் ஏதாவது பேசுனா , நான் சண்டை போட்ருவேன்.அவளோட மகளை மட்டும் மாசத்துக்கு ஒரு தடவையாவது வீட்டுக்கு வர சொல்லிறா. என் மக மட்டும்
என்ன பாவம் செஞ்சவளா? ” என்று கோவமாக மல்லிகா கூறினாள்.
“சரி விடும்மா. அப்பா, அண்ணன் வேலைக்கு போய்ட்டாங்களா. குடிக்க டீ குடும்மா,” என்று சுகன்யா கேட்டாள்.
“அப்பா, அண்ணன் ரெண்டு பேரும் வேலைக்கு போய்ட்டாங்க. இதோ டீ கொண்டு வர சொல்றேன் , “ மேகலா டீ கொண்டு வர சொல்லி எவளோ நேரம் ஆச்சு , உள்ள என்ன பண்ற “ என்று தன் மருமகள் மேகலாவை நோக்கி குரல்
உசர்த்தி பேசினாள் மல்லிகா.
சுட சுட டீயுடன் அவர்களின் முன் நின்றாள் மேகலா. மேகலாவை பார்த்த சுகன்யா , “வாங்க அண்ணி- நல்ல இருக்கீங்களா ,என்ன ஏதோ சோர்வா இருக்கிற மாதிரி தெரியுது.” என்றாள் சுகன்யா.
“வீட்ல வேலை அதிகம்பா. வீட்ல எங்க ஓய்வு கிடைக்குது. “ என்று கவலையுடன் கூறினாள் அண்ணி மேகலா.
“நான் என்ன மாமியார் மாதிரி உன் அண்ணிய பார்த்துகிறேன். அவங்க அம்மா மாதிரி , அதவிட ஒரு படி மேலேய நல்லா பார்த்துகிறேன் , என்ன மேகலா ? “ என்று மல்லிகா கேட்டாள்.
“அத்தை , நீங்க என் அம்மா மாதிரி தான். இத நான் பல முறை சொல்லிட்டேன்.” என்று மேகலா கூற, அருகில் இருந்த சுகன்யாவிற்கு , சுருக்கென்றது.
“அண்ணி , நீங்க உங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வாங்க. அண்ணண கொண்டு வந்து விட சொல்றேன்.
ஒவ்வொரு பொன்னுக்கும் அவங்க புகுந்த வீட்ல நல்லா பார்த்துட்டாலும் , பொறந்த வீடுதான் சொர்க்கம். நம்ம இஸ்டத்திர்க்கு இருக்கலாம். அம்மா அம்மா தான். மாமியார் மாமியார் தான். எனக்கு என் அம்மா , உங்களுக்கு மாமியார் தானே! “என்று கூறி , சுகன்யா தன் அண்ணனிற்கு போன் செய்து கொண்டு இருந்தாள்.
மல்லிகா தன் தவறை உணர்ந்து, மேகலாவை அவளின் அம்மா வீட்டிற்கு சென்று வர சம்மதம் தெரிவித்தாள். எல்லா பெண்களுக்கும் பொறந்த வீடு என்பது சொர்க்கம் தானே !....
முற்றும்
கதை ஆசிரியர்: மணிராம் கார்த்திக்
சிறுகதை : மணிராம் கார்த்திக்
காமாட்சி அம்மன் கோயில் தெரு, மேல அனுப்பனடி, மதுரை
இந்த கதை என் சொந்த கற்பனை கதை , என்பதை உறுதி அளிக்கிறேன்

கருத்துகள் இல்லை
"Please be respectful. Anonymous comments are allowed."