எங்கே போகிறாள்?

எங்கே போகிறாள்?-Where is she going?

எங்கே போகிறாள்?
ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக வேலைப் பார்க்கிறாள், சிநேகா. சாயங்காலம் அவளுக்கு இருக்கிற வேலையைப் பொறுத்து முன்னே, பின்னே வீட்டுக்கு வருவாள்.
தற்போது, உலகக் கோப்பை போட்டி நடப்பதால், அதில் ஆழ்ந்து விட்டார். ஆனால், மாலதிக்குத் தான், மகளை காணாமல் கவலை. அப்போது, அவளருகே வந்து நின்றது, சிநேகாவின் ஸ்கூட்டி பெப். "அப்பாடி வந்துட்டியா...'' என்றாள், மாலா.
"கொஞ்சம் சும்மா இருக்கியா...உன் பொண்ணு,கராத்தேயில்,'பிளாக்பெல்ட்'ன்னு தெரியும்ல... எவனாவது என்னை நெருங்கினா,அவனைத் தொலைச்சுப்புடுவேன். கவலைப்படாம நிம்மதியா இரும்மா,'' என்றபடி, உடை மாற்றப் போனாள்.
மறுநாள், மொபைல் போனுக்கு சார்ஜ் போட்ட சிநேகா, ஞாபக மறதியில் ஆபீஸ் சென்று விட்டாள். ஆபிசிலிருந்து, மாலதிக்கு போன் செய்து, "அம்மா, என் மொபைல் போனில் யார் கூப்பிட்டாலும், இந்த நம்பரில் பேசச் சொல்லும்மா," என்று, ஒரு நம்பரை கொடுத்தாள்.
அன்று முழுக்க ஸ்நேகாவுக்கு வந்த எல்லா அழைப்புகளுக்கும், அவள் கொடுத்த நம்பரில் பேசுமாறு தகவல் கூறினாள், மாலதி.
மாலை, 6:00 மணிக்கு அழைப்பு வர, வழக்கம் போல, "சிநேகா, மொபைல் போனை வீட்டில் வைத்துப் போய் விட்டாள். இந்த நம்பரில் கூப்பிடுங்கள்..." என்றாள், மாலதி.
''அம்மா, நீங்க சொல்றது, எங்க ஆபிஸ் நம்பர் தான். சிநேகா, வழக்கம் போல சாயங்காலம், 5:00 மணிக்கே வீட்டுக்கு கிளம்பிட்டாங்க. இந்நேரம் வீட்டுக்கு வந்திருக்கணும்; வழியில் ஏதாவது டிராபிக்கில் மாட்டியிருப்பாங்க. அவங்க வீட்டுக்கு வந்ததும், நாங்க கூப்பிட்டோம்ன்னு சொல்லுங்க," என்று, வைத்துவிட்டார், மறுமுனையில் பேசியவர்.
மாலதிக்கு முதன் முதலாக, சிநேகா மீது சந்தேகம் வர ஆரம்பித்தது. சந்தேகம் கோபமாகி, வெறுப்பாக உருவெடுத்தது. 'நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டுல வைச்சாலும், அதோட குணம் அதை விட்டு போகாதாம். எவளோ ஒருத்தி கள்ளத்தனமா பெத்து, ஊருக்கு தெரிஞ்சா அவமானம்ன்னு பயந்து, அநாதை இல்லத்தில் விட்டுட்டுப் போனாள்.
'அநாதை நாயை துாக்கி பாசமா வளர்த்தாலும், அதோட பிறவிக் குணம் போகலை... தினமும் சாயங்காலம் ஆபிஸ் விட்டு கிளம்புகிறவள், வீட்டுக்கு வராமல் எங்கோ ஊர் சுற்றி விட்டு, இரவு, 10:00 மணிக்கு வருகிறாள்... கேட்டால், 'ஆபிசில் வேலை’ன்னு பொய் சொல்கிறாள்.
'இன்னைக்கு வீட்டுக்கு வரட்டும், ரெண்டுல ஒண்ணு கேட்கணும். ஒழுங்காயிருந்தா இந்த வீட்டுல இரு... இல்ல, ஏதாவது ஹாஸ்டலைப் பார்த்து ஓடிருன்னு விரட்டி விட்டுற வேண்டியதுதான்...' என்று நினைத்தபடி, சிநேகாவின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தாள், மாலதி.
மாலதியால் மனதில் உள்ள பொருமலை அடக்க முடியவில்லை. கணவர் ராஜேந்திரனிடம், “ஏங்க... அந்த அநாதை நாய் பண்ணியிருக்கிற காரியம் என்னன்னு தெரியுமா?" என்றாள். "யார் மேல உனக்கு கோபம்... என்னவாயிற்று?” என்றார்.
“அதான் நாம வீட்டுல வளர்த்துக்கிட்டு இருக்கோமே ஒரு அநாதை நாயி... அதப்பத்தி தான் சொல்றேன்,'' என்றாள், மாலதி."மாலதி, உனக்கு என்ன புத்திக் கெட்டுப் போச்சா? சிநேகாவையா சொல்ற... அவ, நம்ம பொண்ணுடி."
“ஆமா... நம்ம பொண்ணு... பத்து மாசம் நான் சொமந்து பெத்தப் பொண்ணு பாருங்க... அனாதை ஆசிரமத்திலிருந்து துாக்கிட்டு வந்த சனியன் தானே..." என்று பொரிந்தாள், மாலதி.
"இதப்பாரு, முதல்ல என்ன நடந்திச்சுன்னு நிதானமா சொல்லு. அப்புறம் கோப்ப்படு. இவ்வளவு நாளும், அவள என் பொண்ணு, என் செல்லம்ன்னு கொஞ்சிக்கிட்டிருந்த...
"ஸ்கூல்ல பரிசு வாங்குறப்ப, 12ம் வகுப்புல, 'ஸ்டேட் பர்ஸ்ட்' வந்தப்ப, கல்லுாரி, 'கேம்பஸ் இண்டர்வியூ'வில் தேர்வாகி, நல்ல சம்பளத்துல வேலைக்குப் போனப்ப வரை, அவ உம் பொண்ணா இருந்தவ, இன்னைக்கு மட்டும் அனாதை நாயா மாற காரணம் என்ன ?
“தினமும் ஆபிசுல, வேலை அதிகமா இருக்குன்னு பொய் சொல்லிட்டு, எங்கேயோ ஊர் சுத்த போயிருக்கா... இன்னைக்கு அவ மொபைல் போனை வீட்டுல வச்சிட்டுப் போனதால, உண்மை தெரிஞ்சுது. இன்னைக்கு அவ வரட்டும், எங்கே போய் ஊர் மேய்ஞ்சுட்டு வரான்னு தெரிஞ்சுக்கலாம்..." என்று, கோபத்தில் கொந்தளித்தாள்.
“இங்கப் பாரு மாலதி... 'கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்'ன்னு, பெரியவங்க சொல்லியிருக்காங்க. இன்னைக்கு அவகிட்ட எதுவும் கேட்க வேண்டாம்.
என்னதான் கணவர் சமாதானப்படுத்தினாலும், மாலதி மனசு பொருமிக் கொண்டே இருந்தது. சிநேகாவைப் பார்க்க பிடிக்காமல், தலைவலி என்று சொல்லி படுத்துக் கொண்டாள். மறுநாள் சிநேகாவை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்த்தாள்.
“சரி, என்ன நடக்குதுன்னு முழுசா தெரிஞ்சுக் கலாமே, ”என்றார், ராஜேந்திரன்.'அன்னை சாரதா அனாதை இல்லம்'முன், சிநேகாவின் ஸ்கூட்டி போய் நின்றது. அங்கு உள்ளே போனவள்,இரவு, 7:30 மணிக்கு வெளியே வந்தாள். அடுத்து, அவள் எங்கே போகிறாள் என, ஆட்டோவில் பின் தொடர்ந்தனர்.
அடுத்து, 'ராமகிருஷ்ணர் முதியோர் இல்லம்' முன் நிறுத்தி, அவள் உள்ளே போகவும், அங்குள்ள வாட்ச்மேன், டீ குடிக்க வெளியே வந்தான்.அவனிடம்,“இப்போ உள்ளே ஒரு பெண் போனாளே, அந்தப் பொண்ணு யாரு...
“சனி, ஞாயிறு மட்டும் வராது. அப்ப இங்க உள்ளவங்க இந்தப் பொண்ணை காணாம தவிச்சிடுவாங்க. பெத்த பிள்ளைகளாலே புறக்கணிக்கப்பட்டு, இங்கே தங்கியிருக்கிற முதியோர்களுக்கு, இந்தப் பொண்ணு ஒரு வரப்பிரசாதம். “அதுமட்டுமல்ல, இங்கே வருவதற்கு முன், அன்னை சாரதா அனாதை இல்லத்திற்குப் போய் அங்குள்ள பிள்ளைகளுக்கு தினமும் பாடம் சொல்லிக் கொடுக்கும்.
அதனால், அங்குள்ள பிள்ளைகள் இப்ப படிப்புல நல்லா கெட்டிக்காரங்களா ஆயிட்டாங்க... "இந்தப் பெண்ணை பெத்த மகராசி யாரோஅவ நல்லா இருக்கணும். இந்தக் காலத்துப் பிள்ளைங்க எல்லாம், டிஸ்கோ, பார்ட்டின்னு அலையுறப்ப, இது மட்டும் விதிவிலக்கா, இப்படி சேவை செஞ்சுட்டு இருக்கு..." என்று, வாட்ச்மேன் சொல்ல சொல்ல, மாலதியின் கண்ணில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
உடனே, ஆட்டோவில், கிளம்பி வீட்டிற்குப் போய், மகளின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தனர்.வாசலில் ஸ்கூட்டி பெப்பை சிநேகா நிறுத்தவும் வாசல் என்றும் பார்க்காமல் அவள் காலில் விழுந்தாள், மாலதி.
முதலில் அவளுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. பிறகு தான் என்ன நடந்திருக்கும் என்று புரிந்து, “அய்யோ அம்மா... பெத்த பொண்ணோட கால்ல விழுந்து எனக்கு பாவத்தை சேர்க்காதீங்க... என்னைப் பொறுத்த வரைக்கும், நீங்க தான் என்னைப் பெற்ற தாய் - தகப்பன்.
"கடவுள் எனக்கு நல்ல தாயையும், தந்தையையும் தந்திருக்கார். ஆனா, அந்த அனாதை இல்லத்தில் உள்ள பிள்ளைகளும், முதியோர் இல்லத்தில் உள்ள பெரியவர்களும் பாவம். அவங்களுக்குன்னு யாருமேஇல்லை.
அதனாலதான், தினமும் போய் அவங்களுக்கு என்னால் முடிஞ்ச உதவியை செய்கிறேன்,” என்றாள், சிநேகா."இனி, நீ மட்டும் தனியா போக வேண்டாம்மா. நாங்களும் கூட வர்றோம். நீ வர்ற வரைக்கும் நாங்க, 'திக் திக்’ன்னு காத்திருக்க வேண்டியிருக்கு... எங்களால் முடிஞ்சத நாங்களும் பண்றோம்,” என, மாலதி சொல்லவும், கண்ணில் கண்ணீரோடு, ராஜேந்திரனும் ஆமோதித்தார்.
கதை ஆசிரியர்:எஸ்.செல்வசுந்தரி
தின மலர் 2023
கருத்துகள் இல்லை